சட்டப்படி உரிமையில்லாத நிலையில்கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை ஏற்க முடியாதுதர்மபுரியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு கவர்னர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அரசின் போக்கும், கவர்னரின் போக்கும் வெவ்வேறாக இருந்தால் அது மாநில மக்களை தான் பாதிக்கும். மாநில அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னர் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிக்கும் உரிமை முதல்-அமைச்சருக்கு உண்டு.
செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரம் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்பட ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி உதவித்தொகை பெறுபவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். சில வரையறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். சட்டப்படி உரிமை இல்லாத நிலையில் பல மாநிலங்களுக்கான உரிமை உள்ள ஆற்றில் கர்நாடகா அரசு அணை கட்ட முயல்வதை ஏற்க முடியாது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், நிர்வாகிகள் இளம்பரிதி, சிசுபாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.