புளியந்தோப்பில் காமராஜர் சிலையை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளால் பரபரப்பு


புளியந்தோப்பில் காமராஜர் சிலையை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளால் பரபரப்பு
x

புளியந்தோப்பில் காமராஜர் சிலையை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை அம்பேத்கர் நகர் சந்திப்பில் மார்பளவு காமராஜர் சிலை இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட சிலை என்பதால் சிதலம் அடைந்து இருந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைச் செயலாளர் சி.கே.தேவன், அந்த சிலையை அகற்றிவிட்டு சிறிய பீடம் அமைத்து அதில் 7 அடி உயரத்தில் காமராஜர் சிலையை அமைத்துள்ளார்.

ஆனால் மாநகராட்சி அனுமதி பெறாமல் இந்த சிலை வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று மதியம் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் தலைமையிலான போலீசார் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காமராஜர் சிலையை அகற்ற வந்தனர்.

இதையறிந்த வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் டில்லிபாபு மற்றும் திரவியம், பகுதி தலைவர்கள் என்.எஸ்.பாஸ்கர் மற்றும் பாபுகான் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். காமராஜர் சிலையை அகற்றக்கூடாது என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று சிலை திறக்கப்படும் என காங்கிரஸ் கட்சி சார்பில் எழுதி கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் காமராஜர் சிலையை அகற்றாமல் சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story