நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
கோத்தகிரி அருகே சுண்டட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே சுண்டட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
நீரில் மூழ்கினார்
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்த லாரன்ஸ் என்பவரது மகன் ஆல்வின் ஜான்சன் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவரது நண்பர்கள் திருப்புகழ் (20), பூபால் (20), அஸ்வின் (20). இந்தநிலையில் நேற்று ஆல்வின் ஜான்சன் தனது நண்பர்கள் 3 பேருடன் 2 மோட்டார் சைக்கிள்களில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தார்.
நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்ததோடு, அங்கு குளித்து உள்ளனர். அப்போது ஆல்வின் ஜான்சன் நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்ற முடியவில்லை.
போலீசார் விசாரணை
இதுகுறித்து நண்பர்கள் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நீரில் மூழ்கி இறந்த ஆல்வின் ஜான்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் நீர்வீழ்ச்சியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு செல்லவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இருப்பினும், அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் நீர்வீழ்ச்சியை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.