கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்...


கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்...
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 1:51 PM IST)
t-max-icont-min-icon

கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நாமக்கல்

மாணவர்களும் பிளஸ்-2 படிப்பை முடித்து கொண்டு கல்லூரிகளில் கால் எடுத்து வைக்கையில் என்ன படிப்பு படிக்கலாம்? எந்தப் பிரிவில் சேர்ந்து படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்? என்பன போன்ற எந்த விவரமும் எல்லா மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிகம் தெரிவது இல்லை.

இதனால் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் விரும்பும் பாடப்பிரிவில் அல்லது தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்த்து விடுகின்றனர்.

இந்தநிலையில் எந்தப் பாடப்பிரிவு எடுத்துப் படித்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்பது குறித்து இங்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் கருத்துகள் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

பொருத்தமான வேலை அமையவில்லை

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைகல்லூரி மேனாள் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் கூறியதாவது:-

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து இருப்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, வேலைவாய்ப்பை தருவது தான் காரணம் ஆகும். என்ஜினீயரிங் படித்து விட்டு பொருத்தமான வேலை அமையவில்லை என்ற வருத்தம் தோன்றியதாலும், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாலும் கலை, அறிவியல் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

அது மட்டும் இன்றி கலை, அறிவியல் கல்லூரிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக அந்தந்த மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. அடிப்படை கல்வி அறிவு, போதுமான அறிவாற்றல், எளிமையாக கற்று கொள்கின்ற முறை போன்றவை தான் கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் ஈர்க்கப்பட முக்கிய காரணம் ஆகும்.

மற்ற படிப்புகளை தேர்வு செய்தால் நுழைவு தேர்வு உள்ளிட்ட தடைகள் அதிகம். ஆனால் கலை, அறிவியல் கல்லூரிகளில் உடனடியாக சேர்ந்து விடலாம். தமிழக அரசின் பல்வேறு சலுகை அறிவிப்புகள், தமிழ்வழியில் படித்தால் உடனடி வேலை போன்றவற்றையும் மனதில் கொண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். சமீபகாலமாக அறிவியல் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து உள்ளது. இதற்கு கடுமையான பாடத்திட்டம் உள்ளிட்டவை காரணமாக இருக்கின்றன. எளிமையாக படித்து, உயர்ந்த ஊதியத்தை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் பலரும் கணினி சார்ந்த படிப்புகளை தேர்வு செய்கின்றனர். இதேபோல் வங்கி தொடர்பான வேலைக்கு செல்லும் வகையில் கலை பிரிவில் பி.காம். படிப்பை ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். வேறு பாடங்களில் மாணவர்களுக்கு நாட்டம் குறைந்து உள்ளது.

கணினித்துறை மீது ஆர்வம்

ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் மணிகண்டன்:-

தற்போது கணினித்துறை மற்றும் வணிகவியல் துறை சார்ந்த பாடப்பிரிவுகளுக்கே மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் முன்னுரிமை அளிக்கின்றனர். முந்தைய கல்வி ஆண்டுகளில் எப்போதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொதுவாக அனைத்து பிரிவுகளிலும் சமமாகவே இருக்கும்.

ஆனால் தற்போது மாணவர்களுக்கு கணினி துறையின் மீது அதிகப்படியான ஆர்வம் இருப்பதால், அதை சார்ந்த பாடப்பிரிவுகள் மட்டுமே அனைத்து கல்லூரிகளிலும் நிரம்புகின்றன. மேலும் 2020-ம் ஆண்டுக்கு பிறகு கணினித்துறை சார்ந்த மற்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். வரும் கல்வி ஆண்டுகளில் இது போன்ற சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் அனைத்து கலை மற்றும் அறிவியல் சார்ந்த பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்தால், உயர்கல்வியும் அதை சார்ந்த ஆராய்ச்சி துறைகளும் வளர்ச்சி அடையும். மேலும் நமது இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என 2 துறைகளிலுமே நமது மாணவர்களின் மூலம் நாடு அபரிமிதமான வளர்ச்சியை காண முடியும்.

அரசு பணிகளில் சேர முடியும்

பரமத்திவேலூரை சேர்ந்த மாணவர் தேவேஷ்:-

தொழில்நுட்ப படிப்புகளை விட கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு தற்போது மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக என்னை போன்ற பெரும்பான்மையான மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் படிப்பதை விரும்புகின்றனர். என்ஜினீயரிங் படிக்க அதிக அளவில் செலவு செய்ய வேண்டியது உள்ளது.

அதேசமயம் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்கள் அநேகர். எனவே தான் கலை அறிவியல் படிப்புகளில் சேர விரும்புகிறோம். குறைந்த செலவில் கலை அறிவியல் படிப்பை முடித்துவிட்டு போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று எளிதாக அரசு பணிகளில் சேர முடியும் என்பதால் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள்.

போட்டித் தேர்வுகள்

வெண்ணந்தூர் அருகே உள்ள அலவாய்பட்டியை சேர்ந்த கதிர்வேல்:-

நான் இளங்கலை அரசியல் சார் படிப்பு முடித்து உள்ளேன். நான் கலை அறிவியல் படிப்பு தேர்வு செய்தது ஏனென்றால் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு, இளங்கலை படிப்பு மட்டும் இருந்தால் போதும். விரைந்து பணிகள் கிடைக்கும் என்பதினாலும் இத்துறையை தேர்வு செய்து படித்தேன். எப்படியாக இருந்தாலும் போட்டி தேர்வுகளுக்கு 4,5 ஆண்டுகள் மீண்டும் ஆரம்ப கட்டத்தில் இருந்து படித்து அனைத்து பாடங்களையும் புரட்டி படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

என்ஜினீயரிங் படிப்புகள் படித்தால் 5 ஆண்டுகள் தேவைப்படுகின்றது. மேலும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு மீண்டும் 4,5 ஆண்டுகள் உழைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் கலை அறிவியலில் 3 ஆண்டுகள் மட்டும் முடித்துவிட்டு, தற்போது போட்டி தேர்வுக்காக காலை, மாலை நேரங்களில் படித்துக் கொண்டு வருகிறேன். அத்துடன் எனது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வேலையும் செய்து கொண்டு இருக்கின்றேன்.

உதவிகரமாக இருக்கும்

நாமக்கல் நகராட்சி கோட்டை உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ரவி:-

பி.காம். படிப்புக்கு சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அதிக மோகம் ஏற்பட்டதால் பெரும்பாலான கல்லூரிகளில் பி.காம். படிப்புக்கு இடம் கிடைப்பதில்லை. அதுவும் எதிர்பார்க்கிற கல்லூரிகளில் பி.காம். கிடைப்பதில்லை. ஏமாற்றத்துடன் மாணவர்கள் திரும்பும் நிலைதான் இருக்கிறது. பி.காம். படிப்பு படிப்பதன் மூலம் கணக்காளர், நிதி ஆலோசகர், மார்க்கெட்டிங் மேலாளர் உள்ளிட்ட பணிகளை பெற முடியும். இதனால் மாணவர்கள் பி.காம். படிப்பைதான் அதிகம் விரும்புகின்றனர்.

மருத்துவமும், என்ஜினீயரிங் படிப்புகள் மட்டும்தான் வேலை வாய்ப்பை அளிக்கும் படிப்புகள் என்று எண்ண கூடாது. கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் மூலம் பல பயனுள்ள நல்ல வேலைகளை பெற முடியும். அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கலை, அறிவியல் படிப்புகள் உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 மடங்கு மாணவர்கள்

கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, 'தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த மாதம் 8-ந்தேதி வெளியான நிலையில், அன்றிலிருந்து மே 19-ந் தேதி வரை கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி 3 லட்சத்து 14 ஆயிரத்து 66 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், இணையதளம் மூலமாகவும் தங்களது தரவரிசையை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 679 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கடந்த மாதம் 5-ந் தேதியில் இருந்து கடந்த 4-ந்தேதி வரை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர காலஅவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பித்த 1 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் கல்லூரிகளை விட, கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 2 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்' என்றனர்.


Next Story