பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்ட பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வருகை தந்து பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சி திட்ட பணிகளைப் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தார். அதன் பிறகு பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று அங்கும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
முன்னதாக பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது பள்ளிப்பட்டு அருகே திருமலராஜு பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரை சந்திக்க பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை மாவட்ட கலெக்டர் சந்தித்து தங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் என்றும், தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை விநாயகர் கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்து இருந்ததாகவும், ஆனால் அதே கிராமத்தை சேர்ந்த தனியார் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தங்களுக்கு அந்த நிலத்தை மீட்டு தந்தால் தாங்கள் விநாயகர் கோவில் கட்ட தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகார் மனுவையும் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். இது குறித்து ஆவண செய்வதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின் கோனேட்டம் பேட்டை கிராமத்தில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் அவர் பொதட்டூர்பேட்டை அருகே உள்ள நெடுங்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று அந்த பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து விவரங்களை கேட்டு அறிந்தார்.