வாயலூரில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


வாயலூரில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x

கல்பாக்கம் அடுத்த வாயலூரில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சியில் உள்ள காரைதிட்டு, ஐந்துகாணி பகுதிகளில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இருளர் குடியிருப்பு பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு இருளர் இன மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர், படிக்கும் வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்யாதீர்கள் என்றும், குழந்தை திருமணம் குறித்து பெற்றோர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது வாயலூர் காரைதிட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து முடித்த மாணவ, மாணவிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிப்பதற்காக உய்யாலிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் ஐந்துகாணி-உய்யாலிகுப்பம் சாலை வழியாக தினமும் நடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனால் இருளர் இன மாணவ-மாணவிகளின் நலன் கருதி பழுதடைந்துள்ள இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் திட்ட அறிக்கை பெற்று இதுகுறித்து ஆவன செய்வதாக அவர்களிடம் கலெக்டர் உறுதி அளித்தார்.

வாயலூர் இருளர் பகுதிக்கு கழிவறை, பழுதடைந்த வீடுகளை புதுப்பித்து கட்ட கல்பாக்கம் அணுமின் நிலைய சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து கட்டி கொடுக்க கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனருக்கு பரிந்துரைப்பதாகவும் பழங்குடி இருளர் மக்களிடம் கலெக்டர் உறுதி அளித்தார்.

அவருடன் மாவட்ட சமூகநல அலுவலர் சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெற்றி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், சிவகலைச்செல்வன், வாயலூர் ஊராட்சி தலைவர் மோகனா மதன், வாயலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் எஸ்.அப்துல் உசேன், ஊராட்சி துணை தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.


Next Story