வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85.22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு ேமற்கொண்டார். இதையொட்டி அவர் சூரக்குளம் புதுக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ராம்நகர் முதல் திருப்பதி நகர் வரை ரூ.24.75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்டல் சாலை அமைக்கும் பணிகளையும், ரூ.12.67 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பொது வினியோக கடையின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் காளையார்மங்கலத்தில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.84.50 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணி, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் சத்துணவு மையத்தில் மதிய உணவுத்திட்டம், காலை உணவுத்திட்டம் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவேலங்குடி கிராமத்தில் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.16.59 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பைப்லைன் அமைக்கும் பணிகள், திருவேலங்குடி பகுதியில் ரூ.11.76 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சமூர்த்தி கண்மாய் தூர்வாரும் பணிகள், புதிய மடை கட்டும் பணிகள், சென்னலக்குடி கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டுமான பணிகள் என காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85.22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர்கள் உடனிருந்தனர்.