காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உப்புமா வகை, கிச்சடி வகை, பொங்கல், இனிப்பு உள்ளிட்டவற்றுடன் சத்துள்ள காய்கறிகள் அடங்கிய சாம்பார் போன்றவை ஒவ்வொரு நாட்களில் ஒவ்வொரு உணவு வகைகள் வழங்கப்பட உள்ளது. காலை உணவு வழங்குவதில் நேர மேலாண்மை மிகவும் முக்கியமானது. பள்ளி தொடங்கும் முன்பு குழந்தைகளுக்கு தினமும் காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் உணவு வழங்கப்பட வேண்டும்.

பயிற்சி

இத்திட்டத்திற்கு தேவையான மூலப்பொருட்களை அந்தந்த பகுதிகளில் விளையும் பொருட்களை கொண்டோ அல்லது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் இருந்தோ பெற்றுக்கொள்ள வேண்டும். உணவு தயாரிப்பவர்களுக்கு பயிற்சிகள் முறையாக வழங்க வேண்டும். மாணவ- மாணவிகள் உணவு அருந்துவதற்கு ஏதுவாக தட்டுகள் மற்றும் நீர் குவளைகளை சமூக நலத்துறை மூலம் பெற்று வழங்கப்படவுள்ளது. சரியான சரிவிகிதத்தில் சத்துமிக்க உணவாகவும் வழங்க வேண்டும். இத்திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் தொடர்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணபவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story