தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகாரங்கள், கார வகைகள் தயாரிப்பவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை


தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகாரங்கள், கார வகைகள் தயாரிப்பவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
x

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, பலகாரங்கள், கார வகைகள் தயாரிப்பவர்களுக்கு கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்

உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ள தமிழ்நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்தபந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்க கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது. இதனை உறுதி செய்து அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வழங்க வேண்டும்.

முறையான பயிற்சி

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக. https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் உணவு தயாரிப்பாளர்கள், அனைவரும் முறையான பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்பு துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் இரண்டாவது தளம் என்ற முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story