கோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
பருவமழை பொய்த்ததால் கோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
பருவமழை பொய்த்ததால் கோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த கூட்டத்துக்கு மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அவரிடம் ஏராளமான விவசாயிகள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு:-
வறட்சி மாவட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி :- கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை யை நம்பி ஏராளமான ஏக்கரில் தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் பாதிக் கப்பட்டு உள்ளனர். தக்காளி, சின்னவெங்காயம், தேங்காய் ஆகியவற்றுக்கு விலை இல்லை. எனவே கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
உடனே பல விவசாயிகள் எழுந்து நின்று பருவமழை பொய்த்ததால் கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஏழெருமை பள்ளம் ஓடை
பாலதண்டாயுதம் (மேட்டுப்பாளையம்) :- கோவனூர், பாலமலை பகுதியில் இருந்து உற்பத்தியாகும் ஏழெருமை பள்ளம் ஓடை பெரியநாயக்கன்பாளையம், காரமடை, பெள்ளாதி, சிறுமுகை வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த ஓடையை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. ஆனால் இந்த ஓடையில் தற்போது சாக்கடை தண்ணீர் தான் செல்கிறது. எனவே இதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தண்ணீர் ஓட வழிவகை செய்ய வேண்டும்.
சாதி, மத கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி:- விவசாய நிலங்களுக்கு அருகே காப்புக்காடு என்று அறிவித்து அதில் வனவிலங்குகளுக்கு தீவனப்பயிர் வளர்க்கப்படு கிறது. இதனால் வனவிலங்குகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தீவனப்பயிர்களை அழிப்பதை தடுக்க வேண்டு்ம்.
தூர்வார வேண்டும்
ஆறுச்சாமி (தொண்டாமுத்தூர்) : நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. அவற்றை தூர்வார வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதுதவிர ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து பேசினார்கள். இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.