கோவை போலீஸ் டி.ஐ.ஜி. கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; காரணம் என்ன? பரபரப்பு தகவல்


கோவை போலீஸ் டி.ஐ.ஜி. கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; காரணம் என்ன? பரபரப்பு தகவல்
x

கோவையில் திடீரென கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

விஜயகுமார்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். இவர் கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரது அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கிறது. முகாம் அலுவலகம் (வீடு) ரெட்பீல்டு பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் தான் டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது மனைவி கீதாவாணி (42), மகள் நந்திதா (18) ஆகியோருடன் தங்கி இருந்தார்.

நடை பயிற்சி

கோவை சரகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இதில், மிகவும் திறம்பட பணியாற்றி வந்த டி.ஐ.ஜி., தினமும் காலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்வது உண்டு. அவர், நடைபயிற்சியை முடித்ததும் முகாம் அலுவலக வளாகத்திலேயே பூப்பந்து விளையாடுவது வழக்கம்.அதன்படி நேற்று காலை 6.50 மணிக்கு நடைபயிற்சி செல்வதற்காக புறப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருடைய பாதுகாவலர் ரவிச்சந்திரனும் அங்கு வந்தார். வீட்டை விட்டு வெளியே வந்த டி.ஐ.ஜி. விஜயகுமார் அங்குள்ள வராண்டாவில் பரபரப்புடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே இருந்தார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பின்னர் அவர் திடீரென்று தனது பாதுகாவலரிடம் இருந்து கைத்துப்பாக்கியை (ஏர் பிஸ்டல்) கொடு என்று கேட்டு உள்ளார். உயர் அதிகாரி துப்பாக்கியை கேட்டதால், பாதுகாவலரும் எந்த கேள்வியும் எழுப்பாமல் தன்னிடம் இருந்த துப்பாக்கியை டி.ஐ.ஜி. விஜயகுமாரிடம் கொடுத்தார். துப்பாக்கியை வாங்கியதும் வீட்டின் முன்பகுதியில் உள்ள போர்ட்டிக்கோ பகுதிக்கு விஜயகுமார் வேகமாக சென்றார். பின்னர் அந்த வேகத்தில் தனது தலையின் வலது புறம் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் வலது புறத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு இடதுபுறம் வழியாக வெளியே வந்தது.

உயர் அதிகாரிகளுக்கு தகவல்

இதனால் டி.ஐ.ஜி. விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதற்கிடையே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதை கேட்டதும் பாதுகாவலர் ரவிச்சந்திரன் போர்ட்டிக்கோ பகுதிக்கு ஓடிச்சென்றார். அதுபோல் வீட்டிற்குள் அறையில் இருந்த டி.ஐ.ஜி.யின் மனைவியும் வெளியே வந்தார். அங்கு விஜயகுமார், கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய கையில் கைத்துப்பாக்கி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாவலரிடம் விசாரணை

அதன்பேரில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் டி.ஐ.ஜி.யின் பாதுகாவலர் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

வீடியோ பதிவு

இதைத்தொடர்ந்து விஜயகுமாரின் உறவினர்களும் விரைந்து வந்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் முகாம் அலுவலகம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன் முன்னிலையில் டாக்டர் பாலா தலைமையில் 4 டாக்டர்கள் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் கோவை வந்தார். அவர், விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாகவும் அவர் விசாரணை நடத்தினார்.

மலர் வளையம் வைத்து அஞ்சலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு விஜயகுமாரின் உடலுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கூடுதல் டி.ஜி.பி. அருண், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.அதன்பிறகு அவருடைய உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு சொந்த ஊரான தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி, மகளிடம் விசாரணை

இது தொடர்பாக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கீதாவாணி, மகள் நந்திதா ஆகியோரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. முதற்கட்ட விசாரணையில், போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் மனஅழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காக்கிச்சட்டை கனவு

விஜயகுமாரின் தந்தை செல்லையா ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். தாய் ராஜாத்தி ஓய்வுபெற்ற ஆசிரியை. விஜயகுமாருக்கு பிரேமலதா என்ற அக்காளும், நிர்மலாதேவி என்ற தங்கையும் உள்ளனர். விஜயகுமாரின் மனைவி பெயர் கீதா வாணி. அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விஜயகுமார் தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். பெற்றோரின் விருப்பத்தின் பேரில் என்ஜினீயரிங் படித்தார். பின்னர் காக்கிச்சட்டை அணிய வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றி போலீஸ் அதிகாரியானார்.

குரூப்-2, குரூப்-1 தேர்வுகளில் வெற்றி

விஜயகுமார் 2000-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இந்து சமய அறநிலையத்துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். அதே ஆண்டில் குரூப்-1 தேர்வும் எழுதினார். அதில் வெற்றி பெற்று 2002-ம் ஆண்டு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனார். போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிக்கொண்டே சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதினார். 6 முறை முயற்சி செய்து 4 முறை மெயின் தேர்வு வரையும், 3 முறை நேர்முக தேர்வு வரையும் சென்றார். ஆனால் பணி கிடைக்கவில்லை. கடைசி முயற்சியாக 7-வது முறை முயற்சித்து 2009-ம் ஆண்டில் ஐ.பி.எஸ். அதிகாரியானார். பணியாற்றிய அனைத்து இடங்களிலும் நேர்மையுடனும், துடிப்பாகவும் பணியாற்றினார். தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு சுயம்புவாக வாழ்வில் சாதனைகள் படைத்தார். ஆனால், இப்படி தன்னைத்தானே மாய்த்துக்கொள்வார் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை என்று விஜயகுமாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

21 குண்டுகள் முழங்க டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் தகனம்

டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் கோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை 3.45 மணியளவில் அவருடைய உடல் ரத்தினம் நகருக்கு வந்தது. அதைப் பார்த்து அவருடைய பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய உடல் அங்கிருந்து தேனி பழைய பள்ளிவாசல் அருகில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வலத்திலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

எரிவாயு தகன மேடை வளாகத்தில் விஜயகுமார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருடைய உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்காக போலீசார் அணிவகுத்து நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலை சுமந்து சென்ற டி.ஜி.பி.

தற்கொலை செய்து கொண்ட கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் தேனியில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதற்காக வீட்டின் முன்பு இருந்து அவருடைய உடல் அலங்கரிக்கப்பட்ட ரதத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விஜயகுமார் உடலை டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஐ.ஜி.க்கள் சுதாகர், அஸ்ரா கார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சுமந்து சென்றனர். வீட்டில் இருந்து ரதம் வரை இருபுறமும் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு போலீசார் அணி வகுத்து நின்றனர். உடலை சுமந்து சென்ற அதிகாரிகள் சிலர் தேம்பி அழுதபடி சென்றனர்.

மகளை டாக்டர் ஆக்க ஆசைப்பட்ட டி.ஐ.ஜி.

தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது மகளை டாக்டர் ஆக்க ஆசைப்பட்டார்.

போலீஸ் சூப்பிரண்டு

இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டர். அதன்பிறகு காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். சென்னை அண்ணாநகரில் உதவி கமிஷனராக பணியாற்றிய போது டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று கோவை சரகத்துக்கு நியமிக்கப்பட்டார்.

மகளை டாக்டராக்க ஆசை

இவருடைய மனைவி கீதாவாணி. டாக்டரான இவர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் ஆவார். இவர்களுக்கு நந்திதா என்ற ஒரே மகள் உண்டு. அவரை டாக்டராக்க வேண்டும் என்று டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆசைப்பட்டார். இதற்காக அவர் தனது மகளை நீட் தேர்வும் எழுத வைத்தார். அதில் தேர்வான அவரை எந்த கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்று ஆலோசனை செய்து வந்தார். நேர்மையான அதிகாரியான விஜயகுமார், மகளின் மேல் படிப்புக்காக பணம் சேர்த்து வந்து உள்ளார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து அவருடைய நண்பர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் பணியாற்ற விருப்பம்

தமிழகத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்றுதான் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் ஆசை. வழக்கமாக போலீஸ் துறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்போது ஐ.பி.எஸ்.ஆக தேர்ச்சி பெற்றால் ஏற்கனவே பணியாற்றி வந்த பதவியை ராஜினாமா செய்து விடுவார்கள். ஆனால் விஜயகுமார், தான் ஐ.பி.எஸ். பயிற்சிக்கு சென்ற போது கூட டி.எஸ்.பி. பணியை ராஜினாமா செய்ய வில்லை. இது பற்றி நாங்கள் கேட்டபோது, தமிழகத்தில் தான் பணியாற்ற வேண்டும் தான் எனது ஆசை.

ஏற்க முடிய வில்லை

ஐ.பி.எஸ். பயிற்சி முடிந்ததும் வெளிமாநிலத்தில் பணியாற்ற உத்தரவிட்டால் ஐ.பி.எஸ். பணியை ராஜினாமா செய்து விட்டு தமிழகத்தில் டி.எஸ்.பி. பணியை தொடருவேன் என்று கூறினார். அந்த அளவுக்கு காவல்துறையில் பணியாற்ற அவருக்கு மிகுந்த விருப்பமும், ஆசையும் இருந்தது. தைரியமாக இருக்க வேண்டும் என்று பலருக்கு ஆலோசனை கூறி வந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த 2-வது பெரிய சம்பவம்

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் தமிழக காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ள 2-வது பெரிய சம்பவம் ஆகும்.

ஏற்கனவே இதுபோல் தமிழக காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டி.ஜி.பி.யாக பணியாற்றிய துரை சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகுமாரின் மனைவிக்கு தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்க தலைவர் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஜாங்கிட், சைலேந்திரபாபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சைலேந்திர பாபு கூறும்போது, 'விஜயகுமார் தன்னுடைய மாணவர் என்றும், ஐ.பி.எஸ். தேர்வில் தேர்வு பெறுவதற்கு நான் தான் அவருக்கு பயிற்சி கொடுத்தேன்' என்றும் குறிப்பிட்டார். விஜயகுமாரின் மறைவு தமிழக காவல்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story