கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழகத்தில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந்தேதி கார் வெடித்து உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறது.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி சென்னையில் பெரம்பூர், புதுப்பேட்டை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட தமிழகத்தின் 45 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.