நந்தி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நிலம் அளவிடும் பணி தீவிரம்


நந்தி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நிலம் அளவிடும் பணி தீவிரம்
x

நந்தி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

சோளிங்கர் அருகே நந்தியாறு உருவாகி அய்யனேரி, வெங்குபட்டு வழியாக திருத்தணி நகருக்குள் நுழைகிறது. அங்கிருந்து திருவாலங்காடு ஒன்றியம் இல்லத்தூர்-ராமாபுரம் இடையே சென்று கொசஸ்தலை ஆற்றில் நந்தியாறு கலக்கிறது. திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு இந்த ஆற்றால் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. தற்போது நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலமாக நந்தி ஆற்றங்கரை மேல் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் அருகே ரியல் எஸ்டேட் செய்யும் நபர்கள் சிலர் பிளாட்டுகள் போட்டு உள்ளனர். இவர்கள் நந்தி ஆற்றங்கரையை ஆக்கிரமித்து மண்ணை கொட்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர். இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் 2 தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் நேற்று திருத்தணி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவசண்முகம், தாசில்தார் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் நந்தி ஆற்றங்கரையில் நில அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

முதற்கட்டமாக 10 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் நந்தியாற்றின் கரையை ஆக்கிரமித்து கொட்டி உள்ள மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து அளவிடும் பணிகள் நடைபெறும் எனவும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி சிவசண்முகம் தெரிவித்தார்.


Next Story