10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு: வினாத்தாளில் குளறுபடி - 3 மதிப்பெண்கள் வழங்க தேர்வு துறைக்கு கோரிக்கை
10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் புகாரளித்துள்ளனர்.
சென்னை,
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியை பொறுத்தவரையில் 15 ஆயிரத்து 566 பேரும், தனித் தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற ஆங்கில தேர்வில் வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் புகாரளித்துள்ளனர். கேள்வி எண்கள் 4, 5, 6-ல் குளறுபடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 6 வரையிலான கேள்விகளில் தலா 3 அருஞ்சொற்பொருள் அறிக, எதிர்ச்சொல் அறிக என்பதற்கு பதிலாக 6 கேள்விகளையும் அருஞ்சொற்பொருள் அறிக என்று வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தேர்வு துறைக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.