100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கும்படி கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை


100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கும்படி கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை
x

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது.

மதுரை

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது.

முறைகேடுகள்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உள்பட்ட தாருகாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்கு பொறுப்பாளராக இருப்பவர் விதிகளை மீறி பல மாதங்களாக அந்த பணியில் நீடித்து வருகிறார்.

மேலும் 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றுபவர்களை தனிநபர்களுக்கு சொந்தமான நிலங்களில் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறார்.

ஊராட்சி நிர்வாகத்தினருடன் சேர்ந்து தனிநபருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்கள் பராமரிப்பது போன்ற பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது, தவறான வழிமுறையாகும்.

இதுசம்பந்தமாக உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டப்பணிகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஐகோர்ட்டு கேள்வி

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, பெரும்பாலான இடங்களில் இத்திட்டத்தின் கீழ் பணிகள் முறையாக நடப்பதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தை ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் கண்காணிக்க இயலுமா? என கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அப்படியென்றால் இந்த திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என அரசுக்கு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

சுற்றறிக்கை

இந்தநிலையில் இந்த வழக்கு கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உரிய தீர்ப்பு வழங்குவதற்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story