ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு; இன்று இரவு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடக்கிறது


ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு; இன்று இரவு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடக்கிறது
x

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி (பூஜை) நடக்கிறது.

ஈரோடு

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி (பூஜை) நடக்கிறது.

தவக்காலம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்து எழுந்ததை ஈஸ்டர் பெருவிழா அல்லது உயிர்ப்பு பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். சாம்பல் புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் நாள் முதல் தவக்காலம் தொடங்கி கடைபிடிக்கப்பட்டது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கடந்த 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இயேசுவின் கடைசி இரவு உணவு, நற்கருணை நிறுவுதல், சீடர்களின் பாதங்களை இயேசு கழுவி முத்தம் செய்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருப்பலி முடிவில் நற்கருணை இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை திருப்பலி ஆராதனை நடந்தது. நேற்று காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மவுன ஆராதனை நடந்தது.

சிலுவை பாதை

பகல் 1 மணிக்கு புனித வெள்ளியின் முக்கிய வழிபாடு நிகழ்வான சிலுவை பாதை தொடங்கியது. புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப்தாஸ் வழிபாட்டு நிகழ்வுகளை வழி நடத்தினார். இயேசு குற்றம் சாட்டப்பட்டது முதல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது வரையான 14 நிகழ்வுகள் தியானிக்கப்பட்டு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு இறை இரக்க நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 6 மணிக்கு திருச்சிலுவை வழிபாடு நடந்தது. பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமை தாங்கினார். இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் தியானிக்கப்பட்டன. தொடர்ந்து சிலுவை முத்தம் வழிபாடு நடந்தது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) இரவு வழிபாடுகள் தொடங்குகின்றன. உலக தொடக்கம், இஸ்ரவேல் மக்கள் செங்கடல் கடந்தது முதல் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் வரை தியானிக்கப்படுகிறது. திருமுழுக்கு புதுப்பித்தல், தண்ணீர் மந்திரிப்பு, மெழுகுவர்த்தி (நெருப்பு) மந்திரிப்பு ஆகியவையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு (ஈஸ்டர்) கொண்டாட்ட சிறப்பு திருப்பலி நடக்கிறது.

ஈஸ்டர் சிறப்பு ஆராதனை

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் நேற்று இயேசுவின் சிலுவை பாடுகள் ஆராதனை நடந்தது. தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருந்த 7 திரு வசனங்கள் தியானிக்கப்பட்டன. இங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி மற்றும் காலை 9 மணிக்கு ஈஸ்டர் சிறப்பு ஆராதனைகள் நடக்கின்றன.

இதுபோல் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடுகள் நடக்கின்றன.


Next Story