தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது.
தஞ்சை,
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழகுறக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி, அம்மன் வீதிஉலா 4 ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தியாகராஜசாமியும், கமலாம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்துள்ளதால் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.