திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்
x

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது, கோவிந்தா...கோவிந்தா என்ற கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சென்னை,

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் சித்திரை மாதம் பார்த்தசாரதி பெருமாளுக்கான பிரமோற்சவமும், மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதம் நடைபெறும் பிரமோற்சவமும் புகழ் பெற்றவை. அந்த வகையில், இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம் மற்றும் யானை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 7-வது நாளான நேற்று சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளினார். அப்போது, 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிநெடுகிழும் கோவிந்தா... கோவிந்தா... என்று முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் திரளாக திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

தேர் செல்லும் வழியெல்லாம் தேரின் சக்கரத்துக்கு அடியில் உப்பு வைத்து பக்தர்கள் வழிபட்டனர். கோவிலைச்சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் வண்ணக்கோலங்கள் இட்டு சாமியை வரவேற்றனர். மேலும், கோவிலைச்சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தோட்டத்திருமஞ்சனம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி கோவிலைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 8-வது நாளான இன்று வெண்ணெய்தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவையும், நாளை காலை 6.15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. 13-ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


Next Story