குழந்தையின் பிறந்தநாள் விவகாரம்.. விவாகரத்து பெற்ற தம்பதி வழக்கில் ஐகோர்ட்டு நூதன உத்தரவு


divorced couple case
x

குடும்ப நல நீதிமன்ற உத்தரவை குழந்தையின் தாய் அமல்படுத்துவதில்லை, குழந்தையை தந்தை பார்ப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை என வாதிடப்பட்டது.

சென்னை:

சென்னையைச் சேர்ந்த தம்பதி பிரேம்-மாலா. இவர்களுக்கு 4 வயது மகள் உள்ளார். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து வாங்கினர்.

அந்த தீர்ப்பில், 'குழந்தையை அதன் தந்தை, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை குடும்பநல கோர்ட்டு வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பார்க்கலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது குழந்தையை பிரேம் பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மாலா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேம் சார்பில் ஆஜரான வக்கீல் டி.பிரசன்னா, 'குடும்ப நல நீதிமன்ற உத்தரவை மாலா அமல்படுத்துவதில்லை. குழந்தையை பிரேம் பார்ப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. குழந்தைக்கு 24-ம் தேதி (நாளை) பிறந்தநாள். அதனால், அந்த பிறந்தநாளில் பிரேம் கலந்துகொள்ள அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்' என்று கூறினார்.

இதற்கு மாலா தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

குழந்தையின் பிறந்தநாளை மனுதாரர் மாலா, எதிர்மனுதாரர் பிரேம், தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி என்று அனைத்து உற்றார், உறவினர்களுடன் சென்னை குடும்பநல கோர்ட்டு வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கொண்டாடலாம்.

இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியை கவனிக்க தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். பின்னர், இந்த நிகழ்வு குறித்து 26-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story