கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் ஆய்வு


கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் ஆய்வு
x

கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள அரசு பெண்கள் தங்கும் விடுதிக்கு நேற்று காலை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பெண்கள் தங்கும் விடுதியில் வருகை பதிவேடு எப்படி பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்து அங்கு இருந்த பராமரிப்பாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பெண்கள் தங்கும் விடுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இயங்கும் முறைகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, நகர மன்ற துணைத் தலைவர் ஜி.கே.லோகநாதன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளூர் சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு செய்யும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுடன் அமர்ந்து தலைமைச் செயலாளர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் இருவரும் தரையில் அமர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல், சாம்பார் உணவை ருசித்து சாப்பிட்டனர்.


Next Story