முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 628 மையங்களில் தொடங்கியது.


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 628 மையங்களில் தொடங்கியது.
x

கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 628 மையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

காலை உணவு திட்டம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 77 தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் 3,469 பள்ளி மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வந்தனர். நேற்றுமுதல் கரூர் மாவட்டம் முழுவதும் மேலும் 628 மையங்களில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முலம் 25,980 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள். மொத்தம் 705 மையங்களில் 29,449 தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

சிற்றுண்டி வகைகள்

காலை உணவு திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கேசரி அல்லது ரவா கேசரி சுழற்சி முறையில் ரவா காய்கறி கிச்சடி இது போன்ற பல வகையான காலை உணவு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்.பி. ஜோதிமணி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குனர் சீனிவாசன் (மகளிர் திட்டம்), கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கப்பள்ளி

இதேபோல் தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இதில் கரூர் மாவட்ட மகளிர் திட்ட துணை அலுவலர் சிந்து, தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி, பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

க.பரமத்தி

க.பரமத்தி அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் உள்ள 102 பள்ளிகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.


Next Story