விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
x

சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

சென்னை,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.

தீப்பற்றுவதை தடுக்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்குவது என விமானிகள் திட்டமிட்டனர். அதற்காக விமானம் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானத்திலேயே வட்டமடித்தது. ஒருபுறம் சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில், 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம் தற்போது பத்திரமாக தரையிறங்கியுள்ளது. 8.15 மணியளவில் பெல்லி லேண்டிங் முறையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் பயணிகளும், அவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு நிம்மதியடைந்தேன். விமானம் தரையிறங்குவதில் பிரச்சினை என்ற செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உள்ளிட்ட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன்.

மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மேலும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் இப்போது உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறக்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Next Story