வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்


Chief Minister inaugurates New Vehicles for Revenue Officers
x

வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 77 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் 114 வாகனங்களை வழங்கிடும் திட்டத்தின் முதற்கட்டமாக 77 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கென 2021-2022 ஆண்டில் 96.10 இலட்சம் ரூபாய் செலவில் 8 புதிய வாகனங்களும், 2022-2023 ஆண்டில் 2.48 கோடி ரூபாய் செலவில் 14 புதிய வாகனங்களும், 2023-2024 ஆண்டில் 2.15 கோடி ரூபாய் செலவில் 10 புதிய வாகனங்களும் 2024-2025 ஆண்டில் 61.46 லட்சம் ரூபாய் செலவில் 3 புதிய வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை அலுவலர்கள் தங்கள் பணியினை செம்மையாகவும், விரைவாகவும் மேற்கொள்ளும் வகையில், வருவாய்த் துறையில் பணிபுரியும் 34 துணை கலெக்டர்/வருவாய் கோட்டாட்சியர் மற்றும் 80 வட்டாட்சியர்களின் பயன்பாட்டிற்காக 114 புதிய வாகனங்களை கொள்முதல் செய்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் முதற்கட்டமாக முதல்-அமைச்சர் இன்றைய தினம் 77 புதிய வாகனங்களை 26 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை 3 அலுவலர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வே.ராஜாராமன், கூடுதல் ஆணையர் (வருவாய் நிருவாகம்) முனைவர் ச.நடராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story