12 மாவட்ட சிறைகளில் அடையாள அணிவகுப்பு அறைகள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


12 மாவட்ட சிறைகளில் அடையாள அணிவகுப்பு அறைகள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x

2 கோடியே 51 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் குற்றம் இழைத்து சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல்துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்டிட மத்திய சிறைகளில், நீதித்துறை நடுவர் மற்றும் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக்கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட சிறைகளில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல், தூத்துக்குடி பேரூரணி, நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், சேலம் ஆத்தூர், நாகப்பட்டினம், விழுப்புரம் வேடம்பட்டு, தேனி, திருப்பூர், தர்மபுரி மற்றும் ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய 12 மாவட்ட சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பில் 2 கோடியே 51 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள இந்த சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார். இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் மாவட்ட சிறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story