அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை,
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசிக்க சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இன்று தொடங்குகின்றன. இந்த பணிகளை 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்க இந்திய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகளும் தொடங்க உள்ளன.
இந்த பணிக்கு அரசியல் கட்சிகளின் ஆலோசனையும், ஒத்துழைப்பும் அவசியமாகும். எனவே தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பு கடிதங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பி உள்ளார்.
அதில், தலைமைச்செயலக பிரதான கட்டிடத்தில் உள்ள பழைய கூட்ட அரங்கத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகளும் பங்கேற்கின்றன. தற்போது அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல் அக்கட்சியின் தலைமை கழக அலுவலகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை கழக அலுவலகம் தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளதால், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக தேர்தல் கமிஷனுக்கு முதலில் கடிதம் எழுதப்பட்டது.
ஆனால் இன்பதுரை, சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் திடீரென்று டெல்லி செல்ல இருப்பதால், இன்பதுரைக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்பார் என்று மற்றொரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தங்களுக்கும் அழைப்பு வந்துள்ளதால் அதன் அடிப்படையில் பங்கேற்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
அ.தி.மு.க. கட்சி பதவிகள் விவகாரம் தொடர்பாக கோர்ட்டிலும், தேர்தல் கமிஷனிலும் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்பதால் இதுகுறித்து தேர்தல் கமிஷனின் தலைமை அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, 2 தரப்பு பிரதிநிதிகளையும் பங்கேற்க அனுமதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.