சென்னிமலைமுருகன் கோவிலில் தேர் நிலை சேர்ந்தது


சென்னிமலைமுருகன் கோவிலில் தேர் நிலை சேர்ந்தது
x
தினத்தந்தி 7 Feb 2023 2:20 AM IST (Updated: 7 Feb 2023 3:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை முருகன் கோவிலில் தேர் நிலை சேர்ந்தது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் நேற்று முன்தினம் காலையில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தினார்கள். பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து மேற்கு ராஜவீதி வழியாக இழுத்து சென்று வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. அன்று இரவு கைலாசநாதர் கோவில் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த தேரை இழுத்து மாலை 5.45 மணிக்கு நிலை சேர்த்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதனால் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவில் தேர் திருவிழாவிற்கு வந்திருந்தனர். நாளை (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு சென்னிமலை பார்க் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு சென்னிமலை செங்குந்தர் கைக்கோள முதலியார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பிரபல பாடகர்கள் கலந்து கொள்ளும் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு மகா தரிசனம் நடைபெறுகிறது.


Next Story