வண்டலூர் அருகே கல்குவாரி குட்டையில் சென்னை வாலிபர் பிணமாக மிதந்தார் - கொலையா? போலீசார் விசாரணை
வண்டலூர் அருகே கல்குவாரி குட்டையில் சென்னை வாலிபர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கல்குவாரி குட்டையில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்து கொண்டிருப்பதாக காயார் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். இது குறித்து போலீசார் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கல்குவாரி குட்டையில் இறந்து மிதந்த நிலையில் காணப்பட்ட வாலிபரின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கல்குவாரி குட்டை முன்பு அனாதையாக ஒரு மொபட் நின்று கொண்டிருந்தது. அதில் இருந்த நம்பரை வைத்து போலீசார் விசாரித்த போது அது சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பாபு என்பவருடைய மொபட் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது இறந்த நபர் வேளச்சேரி அம்பேத்கர் நகர் தெருவை சேர்ந்த சக்திதாசன் (வயது 26) என்பதும் அவர் சென்னை தரமணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இறந்து போன சக்திதாசன் தனது நண்பர் பாபுவிடம் இருந்து மொபட்டை வாங்கிக்கொண்டு கீரப்பாக்கம் கல்குவாரி பகுதிக்கு வந்துள்ளார்.
இது குறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன சக்திதாசன் மட்டும் மொபட்டில் கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக வந்தாரா? அல்லது நண்பர்களுடன் வந்து குளிக்கும் போது குட்டையில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாராவது சக்திதாசனை அடித்து கொலை செய்து கல்குவாரி குட்டையில் உடலை வீசிவிட்டு சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் கீரப்பாக்கம் கல்குவாரி குட்டையில் இதுவரை 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கீரப்பாக்கம் கல்குவாரியில் பொதுமக்கள் குளிப்பதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தடை விதிக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.