எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது


எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது
x

ரூ,100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கரை கேரளாவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர்.

கரூர்,

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம் ஆர்விஜயபாஸ்கர். கரூர் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது அ.தி மு.க. கரூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்த நிலையில் கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீசில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில் 'போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததுடன், தன்னை மிரட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், சோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம் ஆர்விஜயபாஸ்கர், கரூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி முன்ஜாமீன் கேட்டு மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி விசாரித்து, எம் ஆர்விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே கரூர் வாங்கல், குப்புச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், குன்னம்பட்டி, தோரணக்கல்பட்டியில் உள்ள எனது 22 ஏக்கர் நிலத்தை மிரட்டியும், போலியான சான்றிதழை கொடுத்தும் பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து எம். ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும் நில மோசடி வழக்கு தொடர்பாக எம். ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான யுவராஜ், செல்வராஜ், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 5-ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து எம். ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்தார். அந்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் கடந்த 7-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக கரூர், சென்னையில் உள்ள எம். ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே கடந்த 11-ம் தேதி எம் ஆர்விஜயபாஸ்கரின் உறவினரும், ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான கவின்ராஜ் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கரூர் பசுபதி செந்தில் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கடந்த 1 மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த எம். ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். அவர் கேரள மாநிலத்தில் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கேரளா சென்று எம். ஆர்.விஜயபாஸ்கரை நேற்று காலை சுமார் 8 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை செய்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நில மோசடி வழக்கில், உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ், சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story