கூவம் ஆற்றை தொடர்ந்து ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை


கூவம் ஆற்றை தொடர்ந்து ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை
x

கூவம் ஆற்றை தொடர்ந்து தற்போது ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. வருகிற 2026-ம் ஆண்டு இந்தப்பாதையில் பயணிகள் திரில் பயணம் செய்யலாம்.

கொல்கத்தா ஹூக்ளி ஆறு

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஆறுகளுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து பயணிகளுக்கு 'திரில்' அனுபவம் அளிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கீழ் சாலை, ரெயில் போக்குவரத்துக்காக சுரங்கப்பாதை மற்றும், மும்பையில் கடலுக்கு அடியில் சாலை வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆறுகள் மற்றும் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் பயணம் செய்வது பொதுமக்களுக்கும் ஒரு நல்ல அனுபவத்தை வழங்குகிறது. அதேபோல் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கீழ் 30 மீட்டர் ஆழத்தில், 520 மீட்டர் அளவில் 2 சுரங்கப்பாதைகளாக அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று கிழக்கு நோக்கியும் மற்றொன்று மேற்கு நோக்கியும் பயணிக்கவுள்ளது.

இந்த மெட்ரோ ரெயிலானது அவுரா முதல் மஹாகரன் வரை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் சென்றால் இந்த ஆற்றுக்கு அடியிலான பாதையை ஒரு நிமிடத்தில் ரெயில் கடந்துவிடும். வருகிற 2035-ம் ஆண்டில் இந்த வழித்தடத்தில் 10 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதையானது உலகின் சிறந்த தொழில்நுட்ப கருவிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரெயில் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

கூவம் ஆற்றில் 'திரில்' பயணம்

சென்னை பயணிகளுக்கும் திரில் பயணம் அளிக்கும் வகையில் சுரங்க ரெயில் பாதைகளிலும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நிலப்பரப்பு பகுதிகளில் வழக்கமாக சுரங்கப்பாதை 17 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படுகிறது. ஆனால் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப்பூங்காவில் இருந்து சென்டிரல் மெட்ரோ வரை 1,040 மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கூவம் ஆற்றில் 880 மீட்டர் நீளத்திற்கு தரைமட்டத்தில் இருந்து 30 மீட்டர் ஆழத்தில் சுரங்க ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மேல் கூவம் ஆற்றில் 20 அடி வரை தண்ணீர் ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து சுரங்கப்பாதையில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் கூவம் ஆற்றை கடந்து மெட்ரோ ரெயிலில் பயணிகள் 'திரில்' பயணம் செய்கின்றனர்.

சென்னையில் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக, மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. வரை 3-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்திற்கு 5-வது வழிப்பாதை உட்பட 3 வழிப்பாதைகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.

கூவத்தை தொடர்ந்து அடையாறு ஆறு

மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4-வது வழிப்பாதையில் பசுமைவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அடையாறு ஜங்சன் மெட்ரோ ரெயில் நிலையம் செல்வதற்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக பசுமைவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையம் அமைய உள்ள பகுதியில் சுரங்க ரெயில் நிலையத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது அடையாறு ஆற்றில் 6 மீட்டர் தண்ணீர் இருப்பதால் அதற்கு கீழ் உள்ள மண்பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது. இதற்காக பத்துக்கு பத்து மீட்டர் மற்றும் ஆறுக்கு ஆறு மீட்டர் என்ற அளவுகளில் 2 மிதவை படகுகள் வடிவமைக்கப்பட்டு அவற்றில் எந்திரங்கள் பொருத்தி அடையாறு ஆற்றில் மண்பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண்பரிசோதனை செய்யப்பட உள்ளது.

ஓரிரு மாதங்களில் இந்தப்பணி நிறைவடைந்த உடன், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சுரங்கம் தோண்டும் பணி நடக்க இருக்கிறது. இந்தப்பணி நிறைவடைந்த உடன் வருகிற 2026-ம் ஆண்டு அடையாறு ஆற்றில் பயணிகள் 'திரில்' பயணம் செய்யலாம்.

நவீன தொழில்நுட்பத்தில் பணி

பொதுவாக ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைப்பதாக இருந்தால், பூமிக்கடியில் ஈரப்பதம் பெரியளவில் இருக்கும் என்பதால், முதலில் 'கேசிங்' வகை குழாய்களை பூமிக்கடியில் சொருகி, அதன் வழியாக மண் தூர்வாரப்பட்டு, பின்னர் தூண்கள் அமைக்கப்படும். குறிப்பாக, ஒரு தூண் அமையவுள்ள பகுதியில், 4-க்கும் மேற்பட்ட 'கேசிங்' வகை குழாய்கள் பூமிக்கடியில் சொருகி பணி தொடங்கப்படும். பொதுவாக தூண்கள் அமைக்கும் பணி, 'என்ட் பியரிங்', 'பிரிக்சன்', 'ஓபன் பவுண்டேஷன்' ஆகிய 3 முறைகளில் அமைக்கப்படுகின்றன. பூமிக்கடியில் மண் சரியாமல், ஸ்திரத்தன்மை உள்ள இடம் வரை, ஆழம் தோண்டப்பட்டு, 'பிரிக்சன்' முறையில் தூண்கள் அமைக்கப்படுகின்றன. சில இடங்களில், குறிப்பிட்ட அடி ஆழத்திற்கு கீழே கற்கள் இருக்கும் பட்சத்தில், அங்கு, 'என்ட் பியரிங்' என்ற முறை பின்பற்றப்படுகிறது.

மற்ற சில இடங்களில் குறைந்த ஆழத்திலேயே, பக்கவாட்டில் தூண்களின் அடித்தளத்திற்கு பலத்தை அதிகரிக்கும் வகையில், 'ஓபன் பவுண்டேஷன்' என்ற முறையில் தூண்கள் கூவம் ஆற்றில் சுரங்கம் தோண்டும்போது இந்த முறையில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து இதேபோன்றும், மேலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் யுக்திகள் பயன்படுத்தி அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டப்படும். சவாலான இந்தப்பணியை திறம்பட திட்டமிட்ட காலத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.


Next Story