சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் சிங்கார சென்னை பயண அட்டை அறிமுகம் - இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோவிலும் பயன்படுத்தலாம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோவிலும் பயன்படுத்தும் வகையில் சிங்கார சென்னை பயண அட்டையை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நாள்தோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள். மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து புதுப்புது திட்டங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஒரே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யும் வகையிலான 'சிங்கார சென்னை அட்டை' என்ற தேசிய பொது இயக்க அட்டையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது.
இதற்கான நிகழ்ச்சி திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்தது. அப்போது, பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி ஆகியோர் சிங்கார சென்னை அட்டையை அறிமுகப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் இயக்குனர்கள் அர்ச்சுனன் (திட்டம்), பிரசன்ன குமார் (நிதி) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருந்தனர்.
இந்த பயண அட்டை குறித்து மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'இந்த புதிய பயண அட்டையை இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், அதாவது ரூபே தேசிய பொது இயக்க அட்டைகளை ஏற்கும் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் பஸ், புறநகர் ரெயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி, சில்லறை விற்பனை கடைகள் என நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையை பயன்படுத்தலாம். தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபே தொழில்நுட்பம் இதன் அடிப்படை பாதுகாப்பு அம்சமாகும்.
இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், வாலட் வசதியுடன் சேர்த்து ரூ.2 ஆயிரம் சேமிக்க முடியும். இந்த அட்டைக்கான இருப்புத்தொகையை பணம் மூலமாகவும், ஆன்லைன் வங்கி சேமிப்பு கணக்கு மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்' என்றனர்.
முதற்கட்டமாக கோயம்பேடு, சென்டிரல், விமான நிலையம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம், கிண்டி ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையை அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களின் தானியங்கி கட்டண வசூல் கேட்களிலும் பயன்படுத்த முடியும்.