சென்னை, எழும்பூர் - கடற்கரை 4வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரெயில்வே முடிவு
ஜூலை 1 முதல் 7 மாத காலத்திற்கு பறக்கும் ரெயில் சேவையை பகுதியாக ரத்து செய்யவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
சென்னை,
சென்னை சென்ட்ரலில் இட நெருக்கடி நிலவுவதால் பலவிரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், வரும் ஜூலை 1ம் தேதி முதல், அடுத்த ஏழு மாதங்களுக்கு, சேப்பாக்கம் வரை மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, பயணியர் தரப்பில் எதிர்ப்பு வலுத்ததால், இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வந்தனர். இதையடுத்து, வரும் ஜூலை 1ம் தேதி முதல், மேம்பால ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யும் திட்டம், ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை, எழும்பூர் - கடற்கரை வரையிலான 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஜூலை 1 முதல் 7 மாத காலத்திற்கு பறக்கும் ரயில் சேவையை பகுதியாக ரத்து செய்யவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்த நிலையில் திட்டத்தை நிறுத்திட முடிவு செய்யப்பட்டு உள்ளது.