சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்


சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளிகளை தனித்துவத்துடன் அடையாளப்படுத்தும் வகையில் சென்னைப் பள்ளிக்கான இலச்சினையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று அறிமுகப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, சென்னைப் பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் முறைகள், கட்டமைப்பு வசதிகள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள குறும்படத்தினையும் அமைச்சர்கள் வெளியிட்டனர். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழர்களின் நிலப் பாகுபாட்டை குறிக்கும் வகையிலான குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதற்கான அடையாளங்களாக தனித்தனி பேட்ஜ்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, 2022-23-ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 395 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போக்குவரத்துத் துறையின் சார்பில் பணியாளர்களின் வாரிசுகள் பயன்பெறும் வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு 32 சதவீதம் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ் குமார், துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த் (பணிகள்), விஷூ மஹாஜன் (வருவாய் மற்றும் நிதி), டி.சினேகா (கல்வி), எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு வட்டாரம்), எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் (மத்திய வட்டாரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story