ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தேர் வெள்ளோட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. கலெக்டர் தொடங்கிவைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலுக்கு புதிதாக 32 அடி உயரத்தில் தேர் செய்யப்பட்டது. இதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை அமைத்து விக்னேஸ்வர பூஜை, உபசார பூஜை, ரத பிரதிஷ்டை, யாத்தரா தானம், யாத்திர பிரதிஷ்டை, கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கோவில் மலை அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு மலையை சுற்றி மீண்டும் நிலையை வந்து அடைந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், மகாதேவமலை மகானந்த சித்தர் சித்தஞ்சி மோகனந்த சுவாமிகள், ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஆற்காடு கண்ணன் ஸ்வீட் லேண்ட் உரிமையாளர் கே.பாஸ்கரன், ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்ல தலைவர் ஜே.லட்சுமணன், துணைத்தலைவர் பென்ஸ் பாண்டியன், ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.