தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம்
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

பகுதியாக ரத்து

தென்னக ரெயில்வேயில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 30-ந்தேதி வரை ரெயில் சேவையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மயிலாடுதுறையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்: 06692) வருகிற 6, 7, 8, 9, 13, 14, 15, 16, 20, 21, 22, 23, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை-கடலூர் துறைமுகம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாட்களில் இந்த ரெயில் வழக்கம்போல் மாலை 5.45 மணிக்கு கடலூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.

இதேபோல் திருச்சியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு காரைக்காலுக்கு செல்லும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:06880) வருகிற 30-ந்தேதி வரை தஞ்சை-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரெயில் தஞ்சையில் இருந்து காரைக்கால் செல்லாது.

நடைமேடை மாற்றம்

இதேபோல் காரைக்காலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்: 06739) வருகிற 30-ந்தேதி வரை காரைக்கால்-தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரெயில் தஞ்சையில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 7.23 மணிக்கு வந்தடையும்.

இதேபோல் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் 1-வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வருகிற 10-ந் தேதி வரை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் 1-வது நடைமேடைக்கு பதிலாக 3-வது நடைமேடையில் நின்று செல்லும்.

புறப்படும் நேரம் மாற்றம்

மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.15 மணிக்கு தஞ்சை புறப்படும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:06695) வருகிற 6, 7, 8, 9, 13, 14, 15, 16, 20, 21, 22, 23, 27, 28, 29 மற்றும் 30-ந்தேதி ஆகிய நாட்களில் 70 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும்.

இதேபோல் காரைக்காலில் இருந்து மதியம் 12.30 மணிக்கு தஞ்சை புறப்படும் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்: 06457) வருகிற 30-ந்தேதி வரை 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும். மேலும் தஞ்சையில் இருந்து மாலை 4.20 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்: 06683) வருகிற 30-ந்தேதி வரை 25 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.45 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்படும்.

வழிமாற்றம்

அஜ்மீரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் அஜ்மீர் - ராமேசுவரம் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:20973) வருகிற 10-ந்தேதி, 17-ந்தேதி மற்றும் 24-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விழுப்புரத்தில் இருந்து அரியலூர் வழியாக இயக்குவதற்கு பதிலாக கடலூர் துறைமுகம், விருத்தாசலம் வழியாக இயக்கப்படும். இதேபோல் விழுப்புரம்-மயிலாடுதுறை முன்பதிவு இல்லா ரெயில் (வண்டி எண்: 06691) வருகிற 6, 7, 8, 9, 13, 14, 15, 16, 20, 21, 22, 23, 27, 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் 90 நிமிடங்களுக்கு வசதியான இடத்தில் ஒழுங்குபடுத்தப்படும். மேலும் ராமநாதபுரம்-செகந்திராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:07696) வருகிற 9, 16, 23 மற்றும் 30-ந்தேதிகளில் 30 நிமிடங்களுக்கு வசதியான இடத்தில் ஒழுங்குபடுத்தப்படும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story