தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: பிரேமலதா நம்பிக்கை
தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று பிரேமலதா கூறினார்.
திருச்சியில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோட்டில் தனித்து போட்டி
ஈரோடு தொகுதியில் முதல் வேட்பாளராக எங்களது கட்சியை சேர்ந்த ஆனந்த்தை தான் அறிவித்தோம். அவர் மக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெற்றது. அங்கு தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை தே.மு.தி.க. தனித்து தான் தேர்தலை சந்தித்து வந்துள்ளது. இப்போதும் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை. விஜயகாந்த் அறிவுரைப்படி தனியாக களம் காண்கிறோம். நிச்சயமாக பணநாயகம், ஆட்சிபலம், அதிகார பலத்தை எதிர்த்து ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறோம்.
நாடாளுமன்ற தேர்தல்
ஆண்ட கட்சியும், ஆளுகிற கட்சியும் தேர்தலில் டெபாசிட் இழந்த சரித்திரமும் தமிழகத்தில் உள்ளது. ஆகவே இங்கு எதுவும் நிரந்தரமில்லை. தே.மு.தி.க.வை எந்த கட்சியும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கட்சியை இயக்குவது விஜயகாந்த் மட்டுமே. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது தே.மு.தி.க.வின் நிலை என்ன? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
கருணாநிதி உயிருடன் இருந்தபோது, அவருக்கு பிரமாண்டமான பொன்விழாவை நடத்தி கருணாநிதிக்கு தங்கபேனாவை விஜயகாந்த் கொடுத்தார். அதனால் மீண்டும் பேனாவுக்கு ரூ.81 கோடி செலவு செய்வது அவசியம் இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு. அதுவும் பேனா நினைவு சின்னம் கடலில் தான் வைக்க வேண்டும் என்பது இல்லை.
மக்கள் வரிப்பணத்தை கல்விக்கு, வேலைவாய்ப்புக்கு, பெண்கள் கஷ்டத்தை போக்க என பல்வேறு வகைகளில் பயன்படுத்த வேண்டும். எழுதாத பேனாவுக்கு கடலில் நினைவு சின்னம் அமைப்பது ஏற்புடையதல்ல.
மக்களுக்கு அதிருப்தி
எங்கள் கட்சி கொள்கையுடன் ஒத்துபோகிற கட்சிகளும் இருக்கிறார்கள். ஆனால் காலச்சூழ்நிலை காரணமாக அவர்களுடன் கூட்டணி வைக்க முடியவில்லை. ஆனால் வருங்காலங்களில் நல்ல முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். தற்போது ஒவ்வொரு அமைச்சர்களின் கருத்துக்களும் மிகப்பெரிய நகைப்புக்குரியதாக உள்ளது.
ஆளுங்கட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி தான் நிலவுகிறது. எனவே தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க. மக்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவு வரும்போது தே.மு.தி.க.வின் பலம் என்ன? என்பதை நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.