தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது, கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.