75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு "ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம்" பெருவிழா - கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் பெருவிழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மத்திய மின்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு முகமை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக "ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம்" என்ற மின்சார பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் துரித மின் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த மின் வளர்ச்சி திட்டம் மற்றும் தீன்தயான் உபத்யாயா திட்டங்களின்கீழ் ரூ.23 கோடி செலவில் புதிய துணை மின் நிலையங்கள், துணை மின் நிலைய மின்மாற்றகள் தரம் உயர்த்துதல், புதிய மின் பாதைகள் அமைத்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் மின்துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பாப்பரம்பாக்கம் மற்றும் குஞ்சலம் துணை மின் நிலையங்கள் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.125 கோடி செலவில் கனகவல்லிபுரம் கிராமத்தில் புதிய 230 கே.வி. துணை மின் நிலையம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படவுள்ளது. திருவாலங்காடு மற்றும் கீழானூர் கிராமங்களில் ரூ.59 கோடி செலவில் இரண்டு புதிய 110 கே.வி. துணை மின் நிலையங்கள் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் பெருவிழாவில் மின்சாரத்தின் முக்கியத்துவம் குறித்து இராஜீவ்காந்தி தேசிய ஆராய்ச்சி கழக நிறுவனத்தின் மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் குமார், சேகர், ஜானகிராமன், பாலச்சந்தர், யுவராஜ், உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, கஜேந்திரன், பாலாஜி, சதீஷ், சங்கர், சுந்தர், குமரகுரு, குமரவேல், சரவணன், ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.