தீபாவளி விடுமுறையை கொண்டாட சென்றவர்கள்: பழவேற்காடு ஏரியில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 2 பேர் சாவு - ஒருவர் உயிர் தப்பினார்
தீபாவளி விடுமுறையை கொண்டாட பழவேற்காடு ஏரிக்கு சென்ற சென்னை வாலிபர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி இறந்தனர். ஒருவர் உயிர் தப்பினார்.
சென்னையை அடுத்த திரிசூலம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). ஐ.டி. ஊழியர். இவர், தீபாவளி விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 10 பேருடன் 5 மோட்டார் சைக்கிள்களில் பழவேற்காடு ஏரிக்கு சுற்றுலா சென்றார்.
மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட படகு சவாரியில் பழவேற்காடு ஏரியில் முகத்துவாரம் அருகே சென்றனர். பின்னர் மதன்குமார் மற்றும் அவரது நண்பர்களான அருண் (24), எபிநேசர் (26) உள்பட 10 பேர் அங்கு குளித்தனர்.
அப்போது மதன்குமார், அருண், எபினேசர் ஆகியோர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். 3 பேரும் நீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், 3 பேரையும் தேடினர். அப்போது மதன்குமாரை மட்டும் நீரில் இருந்து மீட்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் திருப்பாலைவனம் போலீசார், பொன்னேரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாயமான மற்ற 2 பேரையும் தேடினர். அப்போது எபினேசரை மீட்டனர். பின்னர் மதன்குமார், எபினேசர் இருவரையும் பழவேற்காடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், மதன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எபினேசருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இதற்கிடையில் பழவேற்காடு ஏரியில் மூழ்கிய அருண், நேற்று காலை முகத்துவாரம் அருகே பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.