ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்


ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. குளக்கரையில் பெண்கள் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை

ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் ஆன்மிகம் நிறைந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது நேற்று தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் இடங்களிலும், அதனையொட்டியுள்ள பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காவிரி கரைகளில் படித்துறைகளில் தலை வாழையிட்டு, விளக்கேற்றி, தேங்காய், பழம் உள்பட மங்கல பொருட்கள் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள் புனித நீராடி தங்களது திருமணத்தின் போது அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் கழுத்தில் மஞ்சள் கயிறுகட்டி கொண்டனர். மேலும் புதுப்பெண்கள் தாலி சரடுகள் மாற்றிக்கொண்டனர்.

பல்லவன் குளக்கரையில்...

புதுக்கோட்டையில் ஆடிபெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் பெண்கள் வாழையிலை விரித்து அதில் வெற்றிலை வைத்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்தனர். பின்னர் அதற்கு பூப்போட்டு, இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி வளையல், பூ, அரிசி, வாழைப்பழம் வெல்லம், பேரிக்காய் ஆகியவற்றை வைத்து தேங்காய் உடைத்து சூடம் காட்டி வழிபட்டனர்.

பின்னர் அவற்றை ஒரு வாழைப்பட்டையில் வைத்து குளத்தில் மிதக்க விட்டனர். வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி அதனை ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்கு கழுத்திலும் கட்டிவிட்டனர். இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் சாந்தநாத சாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவரங்குளம்

திருவரங்குளத்தில் நைனாரி குளத்தில் பெண்கள் ஒன்று கூடினர். பின்னர் அங்கு அவர்கள் வழிபாடு நடத்தினர். இதையடுத்து பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளத்தில் அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் புதுமண தம்பதிகள் உறவினர்களுடன் வந்தனர். தொடர்ந்து புதுமண தம்பதிகள் தாலி பெருக்கி அணிந்து கொண்டு உறவினர்களிடம் ஆசி பெற்றனர். பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பெரிய நாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கறம்பக்குடி

கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி நூற்றுக்கணக்கான புதுமண தம்பதிகள் தாலி பெருக்கி அணிந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சுமங்கலி பெண்கள் காப்பரிசி படையல் செய்து சாமி கும்பிட்டனர்.

இதேபோல் கறம்பக்குடி சிவன் கோவில் குளக்கரையில் பெண்கள் திரண்டு மழை வேண்டியும், காவிரி தாயை வாழ்த்தியும் கும்மி பாடல்கள் பாடி சாமி தரிசனம் செய்தனர். அப்போது சுமங்கலி பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர். மழையூர், ரெகுநாதபுரம், ஊரணிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை ஆபத் சகாயேஸ்வரர் கோவில் சங்கு ஊரணி குளக்கரையில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவில் புதுமண தம்பதிகள் தலை வாழையில் மஞ்சள், தேங்காய், பழம், பச்சரிசி, கருகமணி போன்ற பூஜை பொருட்களை வைத்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் புதுமண தம்பதிகள் தங்களுடைய திருமணத்தின் போது அணிந்திருந்த மலர் மாலைகளை குளத்தில் மிதக்க விட்டனர். பெண்கள் அனைவரும் மஞ்சள் நூலை ஒருவருக்கு ஒருவர் அணிவித்துக் கொண்டனர். இதில் புதுமண தம்பதிகள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story