பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்குற்ற சம்பவங்களை தடுக்க 56 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள 4 ரோடு, தர்மபுரி மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, அரசு ஆஸ்பத்திரி, தாலூகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சாமியாபுரம் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இந்த நிலையில் குற்றச்செயல்கள் ஈடுபடுவோரை பிடிக்க பொதுமக்கள் பங்களிப்போடு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க போலீசார் முடிவெடுத்தனர்.
இதனையடுத்து மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஏற்பாட்டில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உதவியோடு ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்தில் 56 இடங்களில் 56 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் மூலம் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களை கண்காணிக்க பஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மெடிக்கல் சத்யமூர்த்தி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், சரவணன், பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி, ஒன்றியக்குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் அருணா இளஞ்செழியன், நகர செயலாளர்கள் ஜெயசந்திரன், கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.