நாகை- பட்டினச்சேரி மீனவ மிராமத்தில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு
நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.
நாகை,
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடல் நீர் முற்றிலுமாக கருப்பு நிறமாக மாறியது. இதைத்தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் சி.பி.சி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்தனர்.
இந்த சூழலில், தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு உள்ளது. நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவை இயந்திரங்கள் கொண்டு பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.