காவிரி நதிநீர் விவகாரம்: திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்


காவிரி நதிநீர் விவகாரம்: திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்
x

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகத்தில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திட, சம்பா சாகுபடியைத் தொடங்கிட தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரைத் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழக அரசு பலமுறை வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு நிதியை குறைத்தும், மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்காமலும் அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவிரியில் நமது மரபு உரிமையை நிலைநாட்டவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கவும் ம.தி.மு.க. நடத்தும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வர்த்தகப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் பேராதரவை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story