காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு


காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு
x
தினத்தந்தி 9 Oct 2023 2:07 PM IST (Updated: 9 Oct 2023 2:15 PM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

காவிரி நீர் தொடர்பாக பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நீரைப் பெறுவதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா. நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது அதிமுக அரசு. நியாயமான நீரை கர்நாடக அரசு திறந்து விடாதது சரியல்ல என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். காவிரி விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.

தமிழக பாஜக, காங்கிரஸ் தண்ணீர் திறக்க வேண்டும் என்கிறது; ஆனால் கர்நாடக பாஜக, காங்கிரஸ் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்கிறது. கர்நாடகாவைப் பொறுத்தவரை தேசிய கட்சிகள்தான் அங்கு ஆட்சி செய்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு முழு மனதோடு செயல்பட்டால்தான் நமக்கு நீர் கிடைக்கும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.


Next Story