அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு


தினத்தந்தி 24 March 2024 8:32 PM IST (Updated: 24 March 2024 8:57 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சேலத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, தமிழகத்தின் முக்கிய தலைவர்களான காமராஜர், மூப்பனார், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் தனக்கு உத்வேகம் அளித்ததாக கூறினார்.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். பிரதமர் மோடி சேலத்தில் பேசியதை மேற்கோள் காட்டி பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "நீங்கள் எல்லாம் டெல்லியில் காமராஜரை கொல்ல நினைத்த பாவிகள்" என்றார். அப்போது அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story