மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு...!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை,
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பது என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால், வாடகைக்கு விடப்பட்ட வீட்டுக்கு, வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க முடியாது. அவ்வாறு இணைத்தால், அவர்கள் வீட்டை காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்க சட்டத்தில் இடம் இல்லை. எனவே மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். அதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனு பொறுப்பு தலைமை டி.நீதிபதி ராஜா, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையின்படி, இந்த வழக்கை நாளை (வியாழகிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.