தேர்வு மைய கேட்டை உடைத்து உள்ளே சென்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் 60 பேர் மீது வழக்கு


தேர்வு மைய கேட்டை உடைத்து உள்ளே சென்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் 60 பேர் மீது வழக்கு
x

காஞ்சீபுரத்தில் தேர்வு மைய கேட்டை உடைத்து உள்ளே சென்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு காலை, மாலை என 2 பகுதிகளாக நடைபெற்றது. காலை தொடங்கிய தேர்வு முடிவடைந்த நிலையில், பிற்பகல் தேர்வு 2 மணிக்கு தொடங்கும் என்றும், அதற்கான 30 நிமிடம் முன்பாக வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சில தேர்வர்கள் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள் இருக்க வேண்டும் என விதிகள் உள்ள நிலையில், மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டது. தாமதமாக வந்த 50-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தங்களை உள்ளே விட கோரி காவல்துறையிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததால் போலீசாருக்கும், தேர்வர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

60 பேர் மீது வழக்கு

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் தேர்வர்கள் ஒன்றுசேர்ந்து தேர்வு மைய கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தேர்வெழுதினர். இதனால் தேர்வு மையத்தில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, டி.எஸ்.பி ஜூலியஸ் சீசர், காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெங்கடேசன் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார், தேர்வு மையத்தில் அத்துமீறி நுழைந்தது, சொத்துகளை சேதப்படுத்தியது, கலகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 60 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேர்வர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


Next Story