ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலைநிறுத்தம் - வெளிமாநில வாகனங்களை சிறைபிடித்ததால் பரபரப்பு


ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலைநிறுத்தம் - வெளிமாநில வாகனங்களை சிறைபிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Sept 2023 2:02 PM IST (Updated: 17 Sept 2023 2:22 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இயக்கப்பட்ட வாகனங்களை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்

தனியார் ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் ஆன்லைன் நிறுவனம் தங்களின் ஆலோசனைகளை கேட்காமல் பணியிடை நீக்கம் செய்வதாகவும், வேன்களில் அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை ஓட்டுவதற்கு கட்டாயப்படுத்துவதாகவும் வேன்களில் அந்த நிறுவனத்தின் விளம்பர பலகை இல்லையென்றால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதும் அதிகபட்சமாக கமிஷன் தொகை கேட்பதை கண்டித்து 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குன்றத்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஆன்லைனில் வேன்களை இயக்குபவர்கள் தங்களது வேன்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது வேன்களில் ஒட்டப்பட்டிருந்த அந்த ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பர ஸ்டிக்கர்களை கிழித்தெறிந்தனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்:-

தங்களது வாகனங்களில் அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர்கள் ஓட்டுவதற்கு கட்டாயப்படுத்துகின்றனர். வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு அனுமதி இல்லாததால் போலீசார் தங்களது வாகனங்களை பிடித்து விடுகின்றனர். உரிய ரசீதுகள் இல்லாமல் பொருட்களை ஏற்றி சென்றால் வணிகவரித்துறை அதிகாரிகள் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர் இது குறித்து ஆன்லைன் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்களை எடுத்து வந்து இயக்குவதாகவும் ஆனால் அந்த வாகனங்களில் அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டவில்லை என்றும் தெரிவித்தனர்.

தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் தங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட போவதாகவும் தற்போது இன்றைய தினத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு பதிலாக வட மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்ட வாகனங்களை சிறைபிடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story