செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
கார் மோதியது
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர், அதே பகுதியில் இறைச்சி கடை வைத்துள்ளார். இவரது கடையில் தம்பிரான் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று காலை மாமண்டூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பழவேலி அருகே செல்லும்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
2 பேர் சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இறைச்சி கடைக்காரர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த தம்பிரான் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். காரில் வந்த டிரைவர் உட்பட 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தம்பிரானை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தம்பிரானும் பரிதாபமாக உயிரிழந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்துவந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் பலியான 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. மோட்டார்சைக்கிளும் சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக பழவேலி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.