மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? முதல்-அமைச்சர் பொய்யுரைக்கக் கூடாது - ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு என்றும், 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்றும் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். முதல்-அமைச்சர் கூறியிருப்பது அப்பட்டமான பொய்; சமூகநீதியை தடுக்க முதல்-அமைச்சரே பொய்யுரைக்கக் கூடாது.
இந்தியா முழுவதும் 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை அறிமுகப்படுத்தி பேசிய அவர், நாடாளுமன்றத்தில் 2008&ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூகநீதியை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற சமூக அநீதி எண்ணம் கொண்டவர்களால் மட்டும் தான் இப்படி அப்பட்டமாக பொய் கூற முடியும்.
தமிழ்நாட்டில் சமுகநீதி மலரக் கூடாது என்று முதல்-அமைச்சர் விரும்புகிறாரா? அல்லது முதல்-அமைச்சரை சுற்றியுள்ள சக்திகள் அவருக்கு தவறான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் அளித்து தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்களா? என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அது மிகவும் ஆபத்தானது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று இதுவரை கூறிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இப்போது 2008 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க முடியாத நிலையை உருவாக்கி விடும். இந்நிலைப்பாட்டை முதல்-அமைச்சர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
2008ஆம் ஆண்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே மக்கள் நலத் திட்டங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களை திரட்டுவதற்காகத் தான். இந்த சட்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் மூன்றாவது பத்தியில்,''எந்த ஒரு மாநில அரசோ, யூனியன் பிரதேச அரசோ முறையான அறிவிக்கையை வெளியிட்டு, இந்த சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில் புள்ளிவிவரக் கணக்கெடுப்பின் மூலம் பொருளாதார, மக்கள்தொகை, சமூக, அறிவியல், சுற்றுச்சூழல் குறித்த விவரங்களைத் திரட்ட முடியும்'' என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுகளுக்கு உறுதியான அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பது மாநில அரசின் அதிகாரத்தை அடகு வைக்கும் செயல் ஆகும்.
இந்தியாவில் பீகார், கர்நாடகா , ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்புகள் அனைத்துமே 2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படிதான் நடத்தப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையின் போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு என்று மத்திய அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பீகார் அரசின் சார்பில் அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், 2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து வகையாக தரவு சேகரிப்புகளையும் செய்யலாம் என்று கூறப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும், பிகார் உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டன. இந்த விவரங்கள் எதையும் அறியாமல் யாரோ கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று முதல்-அமைச்சர் கூறியிருக்கக் கூடாது. அது தவறு. இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இத்தகைய பொய்களை மீண்டும், மீண்டும் கூறக்கூடாது.
2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதை நீதிமன்றங்கள் ரத்து செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதும் தவறு ஆகும். பீகார் மாநில அரசு நடத்திய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு செல்லும் என்று பிகார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டது. அவ்வாறு இருக்கும் போது புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அது செல்லாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது இரண்டாவது பொய்.
இவை அனைத்துக்கும் மேலாக மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து மத்திய அரசு நடத்தினால் அது முழுமையானதாக இருக்காது. அதில் தலைகளின் எண்ணிக்கை மட்டும் தான் இருக்கும். பீகாரில் நடத்தப்பட்டது போன்று, மாநில அரசே நடத்தினால் தான் அதில் ஒவ்வொரு சமுதாய மக்களின் சமூக பின்தங்கிய நிலைமை குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இதை உணர்ந்து 2008ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.