மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் சேவை இன்று கூடுதலாக இயக்கம்
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,
மெட்ரோ ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.18 மணி முதல் மதியம் 2.45 மணி வரையில் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
எனவே பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது. கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படும்.
விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதேப்போல, ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் முதல் சென்னை சென்டிரல் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.